கொரோனா தாக்கத்தால் வாய்ப்புகளையும், வருவாயையும் இழந்துள்ள தெருக்கூத்து கலைஞர்கள், இணையம் வழியாக தெருக்கூத்து நிகழ்த்தி வருவாய் ஈட்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கோயில்கள், திரையரங்குகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில், பள்ளிகள் இணையவழிக் கல்வியைத் துவங்கியுள்ளன. திரையரங்குகளுக்கு பதிலாக ஓடிடி இணையத்தளத்தில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற கோயில்களின் திருவிழாக்களும் ஆன்லைனின் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள தெருக்கூத்து கலைஞர்கள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் எலிமேடு பகுதிகளில், தெருக்கூத்தை பாரம்பரியமாக கொண்ட 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கோயில் திருவிழாக்களே, தெருக்கூத்து கலைஞர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சேரிகள் எதுவும் இல்லாத கலைஞர்கள், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர். இந்நிலையில் தான், இணையத்தை பயன்படுத்தி புதுமையான முறையில் தெருக்கூத்தை நடத்தும் யோசனை தோன்றியுள்ளது.
தெருக்கூத்து கலையை வளர்க்கவும், நலிந்த கலைஞர்களுக்கு உதவும் வகையிலும் துவங்கப்பட்ட சுவிக்சம் அமைப்பின் உதவியுடன், இணையவழியில் தெருக்கூத்தை நடத்த துவங்கியுள்ளனர். முதல் முயற்சியாக அரங்கேற்றப்பட்ட பீஷ்மர் பிறப்பு கதையை 100க்கும் மேற்பட்ட தெருக்கூத்து ரசிகர்கள் இணையவழியில் கண்டுகளித்தனர்.
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக்கூத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கும் அவர்கள், தங்கள் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோயில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டாலும், தங்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்த தெருக்கூத்து கலையை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய பரிணாமத்தில் வழங்கி வருகின்றனர்.