புயல் எச்சரிகையை தொடர்ந்து ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகாமையில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்க வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 15,16ஆம் தேதிகளில் கனமழை, புயல் வருவது குறித்த வானிலை எச்சரிக்கை குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த கனமழை எச்சரிக்கையால், 12ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 13ஆம் தேதி நிலவரப்படி 321 படகுகள் ஆழ்கடலில் உள்ளதாகவும் அவை விசாகப்பட்டினம், கிருஷ்ணபட்டினம் அருகேயுள்ளதாக கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படை, கப்பற்படை மூலம் ஆழ்கடல் படகுகளுக்கு தகவல் வழங்கப்பட்டு வருவதாகவும், கடலோர காவல்படையின் கப்பல் சாரங்க் உள்ளிட்ட கப்பல்கள் மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.