அம்பன் புயல் இன்று மதியம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்!!!

அம்பன் புயல் இன்று மதியம் கரையை கடக்கும் நிலையில், 41 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன. வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் அதிதீவிர புயல், மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மதியம் மேற்கு வங்கத்தின் திஹா கடலோர பகுதிக்கும், வங்காள தேசத்தின் ஹடியாவுக்கும் இடையே அம்பன் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநில கடலோர மாவட்டங்களில் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது. புயல் செல்லும் பாதையில் உள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புயல் கரையும் கடக்கும் போது பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட, 41 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில், ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மவுசுமி தீவு, நம்கானா, கோசாபா, தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் போன்ற பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, பேரிடர் மேலாண்மைத்துறை, மீட்புக் குழு உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Exit mobile version