சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் புதிய வகையிலான மட்கலன் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத் தொல்லியல் துறை சார்பாக கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தோண்டப்பட்ட 3 குழிகளில் இருந்து சுடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு மட்கலனை மற்றொரு மட்கலன் கொண்டு மூடிய நிலையில் இரண்டு மட்கலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் தொன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக அகழாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு கட்டமாக இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வில், பருகுநீர் குவளை, அகண்ட வாய் கிண்ணம், மூடியுடன் கூடிய பானை, தங்கத்திலான கம்பியும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக கீழடி, கொந்தகை, மணலூர் அகரம் பகுதிகளில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வுப்பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 24ஆம் தேதி வரை15நாட்கள் அமுலாகும் ஊரடங்கினால், அகழாய்வுப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தொல்லியல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post