மதுரையில் அரசு பேருந்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல்

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மதுரை விமான நிலையத்திற்கு போராட்டக்காரர்கள் வரக்கூடாது என்ற தகவலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அதிவேக அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் வெளி வளாகத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் தலைமையில் விமான நிலைய பின்புறம், பெருங்குடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மட்டுமே விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், தல்லாகுளம் வள்ளுவர் காலனி பகுதியில் திருமங்குளம் சென்ற அரசு பேருந்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து முழுமையாக சேதமடைந்தது. அதனை தொடர்ந்து தல்லாகுளம் காவல் துறையினர், பஸ் மீது கல் வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த கல்வீச்சு சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version