தமிழகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் காரணங்கள் மற்றும் தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் இதுகுறித்த அரசாணையையும் வெளியிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்டன் நாரிமன், நவீன் சின்ஹா அமர்வு விசாரித்து வந்தநிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் ரோஹிங்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.