தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என அறிவித்துள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆலையை மூடி சீல் வைக்க கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் எனவும் அறிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவே இறுதி தீர்ப்பு என்றும் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர், மின் இணைப்பை கொடுக்க உத்தரவிட முடியாது என அதிரடியாக அறிவித்த நீதிபதிகள், மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் தங்கள் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது, என்ற வேதாந்தா நிறுவனத்தின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.