ஸ்டெர்லைட் ஆலை சரிசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தூத்துக்குடி நகரில் சரிசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம், தங்களால் மாசு ஏற்படவில்லை என திரும்ப திரும்ப பொய் சொல்லி வருவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் பத்தாவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, மண் வளம், நிலத்தடி நீர், காற்று மாசு போன்றவற்றை ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியது மறுக்க முடியாத உண்மை என்று கூறினார். ஆலையால் மாசு ஏற்படவில்லை என்று திரும்ப திரும்ப கூறுவதற்கு பதிலாக, அதை நிரூபித்து காட்ட வேண்டும் எனவும் வைத்தியநாதன் வாதிட்டார். கடுமையான நிபந்தனைகள் விதித்த போதும், ஆலை நிர்வாகம் அதை பொருட்படுத்தாததன் விளைவாக, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்ந்ததால், ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் விதிகளை பின்பற்றாததால் ஆலை மூடப்பட்ட போதும், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டு, நீதிமன்றம் மூலம் ஆலையை இயக்க அனுமதி பெற்று விடுவதாக குறிப்பிட்ட வழக்கறிஞர் வைத்தியநாதன், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version