ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, ஜூலை 31 ஆம் தேதி வரை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆலையை ஏன் தமிழக அரசே எடுத்து நடத்தக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. இதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூடுதல் நாட்கள் இயக்குவது பற்றி முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குழுவில் உள்ளூர் பிரமுகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட 3 பேரை சேர்க்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், ஆக்சிஜன் தயாரிப்புக்காக தற்காலிகமாக ஆலைக்கு மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.