ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனமும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசும், வேதாந்தா நிறுவனமும் பதில்மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.