ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version