பூமியில் இருக்கும் நீரில், 96% சதவீதம் கடல்களில் உப்புநீராகவும், 2% சதவீதம் பனிப்பாறைகளாகவும் உள்ள நிலையில், இரண்டே சதவீதம் நீர் மட்டுமே நன்னீராக பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.
அத்தியாவசியமான நீரை, நம்மை அறியாமல் அதிக அளவில் வீணாக்குவதை தடுக்க,
பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
பரவலாக நாம் பலரும் தண்ணீரை திறந்து விட்டபடி பல் துலக்கும் பழக்கத்தை
கொண்டுள்ளோம். அதற்கு மாற்றாக, சிறு குவளையில் தண்ணீர் எடுத்து பல் துலக்குவதால் 75% நீரை சேமிக்கமுடியும் என்கிறது ஆராய்ச்சி பதிவேடுகள்.
தண்ணீர் சுத்திகரிப்பு கருவியானது மூன்றில் ஒரு பங்கு நீரை மட்டுமே குடிப்பதற்கு உகந்ததாக சுத்திகரிக்கும். வெளியேற்றப்படும் இரண்டு மடங்கு நீரை பயன்படுத்த முடியாது என எண்ணி வீணடித்துவிடுகிறோம். ஆனால், அந்த நீரை ஒரு குவளையில் சேகரித்து, அதை துணிகள் துவைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் பயன்படுத்தலாம்.
சலவை இயந்திரத்தில் இருந்து வெளியாகும் நீரை கழிவறைகளில் பயன்படுத்துவதன் மூலம் நீர்ப்பயன்பாட்டை பாதி அளவு குறைக்கலாம்.
சாதாரணமாக, சமையலறை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் இருந்து வெளியேறும் நீரை கட்டுப்படுத்தி, ஷவர் போல அனுப்பும் புதிய நுட்பத்தை சென்னையில் ஒரு நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. குழாய்களில் அதை பயன்படுத்துவதன் மூலம், மிகக்குறைந்த அளவே நீர் வெளியேறுகிறது.
குழாய்களை சரியாக மூடி, தண்ணீர் சொட்டுவதை நிறுத்தினாலே, ஒவ்வொரு வீட்டிலும், ஆண்டுக்கு 5 ஆயிரம் லிட்டர் நீரை மிச்சப்படுத்தலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், தோட்டம் வைத்திருப்பவர்கள், தானியங்கி நீர்தெளிப்பான்களை பயன்படுத்தாமல், நேரடியாக பாசனம் செய்யலாம். மேலும், சூரியஒளி மற்றும் வெப்பத்தினால் நீர் ஆவியாவதை தடுக்க, செடிகளை சுற்றி, உதிர்ந்த இலைகளை வைத்து, அதன் மீது நீரை ஊற்றுவதன் மூலமாகவும் மிச்சப்படுத்தலாம். வேரின் அருகில் துளையிடப்பட்ட தொட்டியை புதைத்து, அதில் நீரை ஊற்றினால், மெதுவாக நீர் உறிஞ்சப்படும். அதோடு தேனீ, குருவிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்களும் இந்நீரை அருந்த ஏதுவாக இருக்கும்.
மேலும், அதிகாலை அல்லது மாலையில் பாசனம் செய்வதன் மூலமாக 33% நீர்ப்பயன்பாட்டை குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.