கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்ட்ராவில், இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கட்டுப்பாடுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 15சதவீத பணியாளர்களுடன் இயங்குகின்றன.
திருமண நிகழ்ச்சிகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
டெல்லியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆறு நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் பேருந்துகள், ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 3 நபர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இதைத் தவிர கர்நாடகாவில் கோயில்கள், தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள் பழங்கள் விற்பனைக் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கபட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வார இறுதிநாட்கள் மற்றும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர வார நாட்களிலும் 60 மணி நேர பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவை பொறுத்தவரை இரவு நேரங்களிலும் வார இறுதிநாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப்பொருட்களைத் தவிர மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த 10 பஞ்சாயத்துகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.