"இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்தும் செயல்" – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தேசத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது “தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ?” என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதாக தெரிவித்துள்ளார்.

சட்ட மேதை அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டை குறிக்கும் சொல்லே தவிர, இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாட்டை, ஆளும் ஓர் அரசை குறிப்பிடும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்திய அரசு என்று குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலாகும் என கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

ஜெய்ஹிந்த் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென்றும், அத்தகைய கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நகை கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version