தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் தூய்மைப் பள்ளிகளாக உறுதி படுத்திட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறையின் மாநில திட்ட இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கடந்த 2016-17 கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சுத்தமான குடிநீர், மற்றும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் பள்ளிகளில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து கட்டிடங்களில் உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினை கடைபிடித்து தூய்மைப் பள்ளிகளாக மாற்றிட அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.