ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தெலங்கானா தனி மாநிலம் உருவாகிய பிறகு, ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டார். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் இந்தத் திட்டத்தை தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் சட்டத் தலைநகராகவும் விளங்கும் என அறிவித்தார். அம்மாநில முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ஆந்திராவின் தலைநகரமாக அமராவதி அமைவதற்குத் தங்கள் இடத்தை அரசுக்கு வழங்கியுள்ளதாகவும், முதல்வரின் அறிவிப்பால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், ஆந்திராவின் தலைநகராக அமராவதியை மட்டுமே கட்டமைக்க வேண்டுமெனக் கோரிக் கொல்லப்புடியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.