அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தினங்கள், தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி 2015 ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதியை தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காததோடு, பணிக்கு வராத ஊழியர்களுக்கு அன்றைய ஊதியம் தரவில்லை எனத் தெரிகிறது. இதை எதிர்த்து தனியார் ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் கீழ், அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தினங்கள் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.