மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் பட்ஜெட் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜி.எஸ்.டி நிலுவை தொகையை பொறுத்தவரை தமிழகம் தனிமைப்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், எல்லா மாநிலங்களுக்கும் நிலுவை தொகை உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு நிலுவை தொகை இரண்டு தவணைகளில் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் கைகளில் பணம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பதால் தான் வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயம் மற்றும் கிராமபுறத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசி அவர், மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.