ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதையடுத்து, நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் கடனுக்கு உரிய வட்டியின் விகிதமே ’ரெப்போ வட்டி விகிதம்’ ஆகும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை சமீபத்தில் தொடர்ந்து 4 முறைகளாகக் குறைத்தது. அவற்றால் மொத்தம் 1.15% வட்டிக் குறைப்பை வங்கிகள் பெற்றன.இதனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற வட்டிக் குறைப்பின் பயனை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் வங்கி தனது கடன் வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கியின் ‘மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்’ உடன் இணைத்து உள்ளதால், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் குறையும் போதெல்லாம் ஸ்டேட் வங்கியின் கடன்வட்டி விகிதமும் குறையும்.இதனால் ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெற்ற கடன்களுக்கான வட்டிவிகிதமானது 8.25%ல் இருந்து, 8.10% ஆக இப்போது குறைந்துள்ளது. இதனால் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன் பெற்றவர்கள் அனைவரும் பயனடைவார்கள். ஆனால் அதேசமயம், வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு வங்கி கொடுக்கும் வட்டியும் இதனால் குறையும்.
ஆனாலும், ஸ்டேட் வங்கியின் வட்டிக் குறைப்பு அறிவிப்புக்கு அதன் வாடிக்கையாளர்கள் வரவேற்பையே அளித்துவருவதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது. ஸ்டேட் வங்கியின் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி பிற வங்கிகளும் தங்கள் கடன்வட்டிகளைக் குறைக்க வேண்டியது அவசியம், அப்போதுதான் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் பலன் கொஞ்சமாவது மக்களைச் சென்றடையும். ரிசர்வ் வங்கியும் கூட வங்கிகளுக்கு இதனை அறிவுறுத்தி உள்ளன. பிற வங்கிகள் தங்கள் வட்டிக் குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுமா? – எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.