வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை, வரும் 24ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கஜா புயல் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத்தொழிலாளர்கள் 60 லட்சம் பேருக்கு, தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என, விதி எண் 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த மாத இறுதிக்குள்ளாக அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தை கண்காணிக்க, மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சியில், ஆணையர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதிக்குள், அனைத்து ஏழைத் தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாயை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.