வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு நட்சத்திர விடுதிகள் சலுகை!

வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த தமிழர்கள், தற்போது தாயகம் திரும்பி வரும் நிலையில், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப, நட்சத்திர விடுதிகள் குறைந்த வாடகைக்கு தரப்படுவதாக சென்னை ஸ்டார் ஹோட்டல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடைமுறையில் இருப்பதால், வெளிநாடுகளில் தங்கி பணிபுரிபவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் தாயகம் திரும்பும் வகையில் மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் அவர்களை நட்சத்திர விடுதிகளில் 7 நாட்கள் தங்க வைத்த பின்னரே, சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர விடுதிகளிலும் அரசு வழிமுறைகளின் படி, குறைந்த வாடகையில் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஹோட்டல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் நேரடியாக அங்கிருந்து பேருந்து மூலம் நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்து வரவும், ஏழு நாட்கள் ஹோட்டலில் தங்கிய பின்னர் உரிய விதிமுறைகள் படி, சொந்த ஊருக்கு செல்வதற்கான தேவையான பேருந்து, ரயில் வசதிகளும் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பாக கட்டாயம் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம். எனவே, அவர்கள் அரசின் விதிமுறையை பின்பற்றி இதுபோன்ற நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொண்டால், அனைவருக்குமே அது பாதுகாப்பை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

Exit mobile version