பழங்குடி மக்களுக்கான போராளி ஸ்டேன் சுவாமி காலமானார்!

எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி இறந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்று அவர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதற்கு எதிராக அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். மேலும் சிறையில் தனக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

கடந்த மேமாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசிய அவர், தனது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தார். `இப்படியே போனால் இறந்துவிடுவேன்’ என்றும் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என என்ஐஏ கராறாக இருந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. ஜார்கண்டில் பழங்குடி மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய ஒரே தமிழர் ஸ்டேன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version