ஸ்டாலின் பொய் சொல்வதையே ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி, சேலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக வேட்பாளாரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தும், சங்ககிரி அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன், ஓமலூர் அதிமுக வேட்பாளர் ஆர்.மணி, மேட்டூர் அதிமுக வேட்பாளர் சதாசிவம் ஆகியோருக்கு ஆதரவாகவும் துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். பொய் சொல்வதை தவிர ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தெரியாது எனக் கூறினார். திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு…கள்ள நோட்டு எனவும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை செல்லும் நோட்டு என்றும் கூறினார். 5 ஆண்டுக்காலம் மின்சார பற்றாக்குறையை தீர்க்க முடியாத அரசாக தான் மைனாரிட்டி திமுக அரசு இருந்ததை ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார்.
தாதகாப்பட்டி, சேலம்
திமுகவை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதையும், அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலங்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததையும் நினைவூட்டினார்.
தருமபுரி
சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தருமபுரியில் பாலக்கோடு அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகனையும், பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளர் ஜி.கே.மணி உள்ளிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு நல்ல திட்டங்களை அளித்துள்ளதாகவும், சாதி, மத மோதல்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறினார்.