ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது-துணை முதலமைச்சர்

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துதமிழ்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

சிந்தாமணி பகுதியில் வாக்கு சேகரித்த அவர், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், தொகுதி மக்களின் தேவைகளை அவர் நிறைவேற்றுவார் என்றார். மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சிறப்பான நல்லாட்சியை வழங்கியதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்ட அவர், 28 ஆண்டுகள் அதிமுக நல்லாட்சி வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

விக்கிரவாண்டி தொகுதி பனையபுரத்தில் வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர், திமுக ஆட்சிக்காலத்தை விட அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரசாரம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின் காரணத்தாலேயே சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தைக்கு உகந்த இடமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

வாக்கூர் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின் கூறிய எதுவும் இதுவரை நடந்தது கிடையாது என்றார். காவிரி பிரச்னையில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்ட ராகுல் காந்தியை பிரதமராக்குவேன் என்று ஸ்டாலின் பேசியதை அவர் சுட்டிக் காட்டினார்.

கயத்தூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதலமைச்சர், திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து மக்களை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்து, நல்ல தீர்ப்பை தருவார்கள் என்றும், ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை, ஏழை எளிய மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக, விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் கூறினார். ஆட்சி குறித்து கேள்வி எழுப்பும் ஸ்டாலினுக்கு, அதிமுக சாதனைகள் மூலம் பதிலளித்து வருவதாக கூறினார்.

Exit mobile version