பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக்கேட்க கூட திராணி இல்லாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தியாகராயநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, தியாகராய நகர் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், 5 வருடங்கள் மேயராக இருந்த ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என குற்றம்சாட்டினார். ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தகுதியே ஸ்டாலினிடம் இல்லை எனவும் பகிரங்கமாக சாடினார்.
சென்னை அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார். எம்எம்டிஏ காலனி பகுதியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர், பெண்கள் குறித்து இழிவாக பேசிய கட்சி நிர்வாகியை தட்டிக் கேட்க திராணி இல்லாத தலைவர் ஸ்டாலின் என விமர்சித்தார்.
இதேபோன்று சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்ராஜை ஆதரித்து, மயிலை மாங்கொல்லையில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாக சென்னை உள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார். இது அதிமுக அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த விருது என்று அவர் கூறினார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும் முதலமைச்சர் சாடினார். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றிக்குப் பிறகு நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார்.
போகிற இடத்தில் எல்லாம் அதிமுக அரசு மீது அவதூறு சொல்லும் பணியை மட்டும்தான் ஸ்டாலின் செய்துவருகிறார் என்றும், ஆனால் பத்தாண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி அதிமுக வாக்கு கேட்கிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.
விருகம்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.ரவியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சென்னை திமுகவின் கோட்டை எனக்கூறி வரும் ஸ்டாலினுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் வேட்டு வைப்பார்கள் என கூறினார். உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பத்தாண்டு காலம் பதவி வகித்த ஸ்டாலின் சென்னை மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பென்ஜமின் மற்றும் பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜமன்னாரை ஆதரித்து முகப்பேர் மேற்கு பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதுபோல திமுக நடிப்பதாகவும், உண்மையில் சிறுபான்மையினர்களின் நலனை காப்பது அதிமுக தான் என்றார். அப்துல் கலாம் குடியரத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது ஆதரித்து வாக்களித்தது அதிமுக, ஆனால் எதிர்த்தது திமுக என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அலெக்ஸாண்டரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வேளாண்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை என அனைத்துத் துறைகளிலும் அதிமுக அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகள் கிடைத்தன என்றார். அமைச்சர்கள் மணி, மணியாக செயல்பட்டு விருது வாங்கியதை ஸ்டாலின் விமர்சித்து வருவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.