ஒரு தாய் வயிற்றில் பிறந்த சொந்த அண்ணனையே ஏற்காத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன், ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன், திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார், லால்குடி தொகுதி தமாகா வேட்பாளர் தர்மராஜ், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜ், துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் கோதாவரி- காவிரி இணைப்புத்திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார். ஆனால் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க ஸ்டாலின் இதுபோன்ற ஏதாவது நடவடிக்கைகளை எடுத்துள்ளாரா என கேள்வி எழுப்பினார்.
திமுகவைப் போல ஆட்சி அதிகாரம் பெறுவதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை என விமர்சித்த முதலமைச்சர், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் என கூறினார். ஸ்டாலின் சொல்வதுபோல ஊழல் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்தால், திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள்தான் சிறைக்குப்போவார்கள் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.
திமுகவினர் அவரவர் தொழிலை பாதுகாத்துக்கொள்ளவே அரசியல் செய்கின்றனர், ஆனால் அதிமுகவினர் மக்களுக்காக உழைக்க அரசியலுக்கு வந்துள்ளனர் என்றும் முதலமைச்சர் கூறினார். சொந்த அண்ணனை கூட கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு விஷத்தன்மை கொண்ட ஸ்டாலின், தன்னை விமர்சிப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஸ்டாலினின் இத்தகைய மோசமான செயல்பாடுகள்தான் சிறந்த உதாரணம் என்பதை புரிந்துகொண்டு, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய பொதுக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.