ஆ.ராசா பேசியதை ஆதரிக்கும் ஸ்டாலினின் அறிக்கை… இவ்வளவுதான் திமுக

பெண்களை மதித்துப் போற்றுவதைத் தன் இனமரபாகக் கொண்டது தமிழர் வாழ்வியல். இந்த வாழ்வியலின் வெளிப்பாடாகவே, வயது வித்தியாசமின்றி எந்த பெண்குழந்தையையும் அம்மா என்றழைக்கும் வழக்கம் தமிழ்மண்ணில் தொடர்ந்து வருகிறது. காரணம், தாய்மைக்கு தமிழர்கள் அளிக்கும் முக்கியத்துவம். இந்நிலையில், அற்ப அரசியலுக்காக தாய்மையைப் பழித்துப் பேசும் தரங்கெட்ட அரசியலைக் கையிலெடுத்திருக்கிறது திமுக.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து கொச்சையாகப் பொதுவெளியில் பேசினார். வெறும் வெறுப்பரசியல் செய்வதற்காக இப்படி பேசியது தமிழகம் முழுக்க அதிருப்தியையும் திமுக மீதான அறுவறுப்பையும் அதிகரித்தது.

இதன் விளைவாக எழுந்த கடும் எதிர்ப்பலைகளுக்குப் பின்னர், கடமையை விட கண்ணியமே முக்கியம் என்று அரைகுறையாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். தவறிக்கூட கண்ணியமாக இருக்க வேண்டியது கட்சியினரின் கடமை என்று அறிவுறுத்தவில்லை.

சொல்லப்போனால், “அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றுதான் சொல்கிறாரே ஒழிய, ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டிப்பே இல்லை.

பெண்களை இழிவாகப் பேசுவதை திமுகவின் மேடைப்பேச்சாளர்கள் பலரும் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக தீப்பொறி ஆறுமுகம் உள்ளிட்ட பேச்சாளர்கள் கேட்கக்கூசும் விதமாக பொதுவெளியில் பேசக்கூடியவர்கள். இந்நிலையில், மீண்டும் பெண்களைக் குறித்து அவதூறாகப் பேசுவதை வழக்கமாக்கி வருகிறது திமுக.

ஏதோ 3ஆம் கட்ட, நான்காம் கட்ட பேச்சாளர்கள் பேசினால் கூட (யார் பேசினாலும் ஏற்புடையது அல்ல) தெளிவற்ற பேச்சு என்றும் தற்குறித்தனம் என்றும் கடந்து விடலாம் . ஆனால், பொறுப்பில் இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே இவ்வளவுதான் பொதுவெளி நாகரிகமும், பெண்காளின் மீதான மரியாதையும் என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஏற்படப்போகும் அபாயங்களை மக்கள் உணர வேண்டியது அவசியம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

 

Exit mobile version