முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள், கடந்த 13-ம் தேதி அதிகாலை காலமானார். அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில், ஸ்டாலின், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், முதலமைச்சருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.
முன்னதாக, முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், முதலமைச்சருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
நீதிபதிகள் வேலுமணி, வைத்தியநாதன், அரசு அதிகாரிகள், பாஜக தமிழக தலைவர் எல். முருகன், திரைப்பட இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குட்டி பத்மினி மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோரும் முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.