வழக்கமாக தவறான தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் வேலையின்மை குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பொய்யான தகவல்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கடந்த 8 மாதங்களில் வேலைவாய்ப்பின்மை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 90 சதவீத வீடுகளில் ஒருவர் வருமானம் இழந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஸ்டாலினின் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்துள்ள செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்டாலினுக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கமே இல்லை எனத் தெரிவித்துள்ளார். துண்டுச்சீட்டு எழுதிக் கொடுக்கும் நபர்களிடமாவது சரியான தகவல்களை கேட்டுப் பெற்றிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சி எம் ஐ இ நிறுவனம் வெளியிட்ட வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள அமைச்சர், இதைப் பார்த்தவாது ஸ்டாலின் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சி எம் ஐ இ வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, வேலையின்மை அட்டவணையில் தமிழகம் 22வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் ஸ்டாலின், மலிவு அரசியலை நிறுத்திவிட்டு, மக்களுக்காக ஏதாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார். உண்மை பேசுவதற்கு நெஞ்சுரம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் அரசாக அதிமுக அரசு திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்த உண்மை புள்ளிவிவரங்களையும் அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக ஏப்ரல் மாதம் 49 புள்ளி 8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, ஜூலை மாதத்தில் 8 புள்ளி 1 சதவீதமாக குறைந்துவிட்டதாக மதுரை மண்டல அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், பொதுவெளி தரவின் உண்மை தன்மை அறியாமல் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.