மு.க.அழகிரி மீதான அச்சத்தால் மதுரை நாடாளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்து விட்டதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் திமுகவின் தேர்தல் உத்திகளை வகுக்கும் தளபதியாக இருந்தவர் மு.க.அழகிரி. கருணாநிதியாலேயே பாராட்டப்பட்டவர், அவருக்காகவே கட்சியில் ‘தென் மண்டல அமைப்புச் செயலாளர்’ என்ற புதிய பதவி உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அழகிரி உடனான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கினார் திமுகவின் தலைவர் ஸ்டாலின். அழகிரியை ஒதுக்க முடிந்த அவரால் தென் மண்டலத்தில் தனது தலைமையை நிலை நிறுத்த முடியவில்லை. தென் மண்டலத்தில் உள்ள திமுகவினர் ஸ்டாலினின் தலைமையை இன்னும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து ஸ்டாலின் தென் மண்டலத்தில் தனது தலைமையை வலுப்படுத்துவார் என்பதே திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஸ்டாலின் தனது தொகுதிப்பட்டியலில் தென் மண்டலத்தை முற்றிலுமாகத் தவிர்த்து உள்ளார்.
அழகிரியின் பிரசார வியூகத்திற்கு எதிராக தன்னால் தாக்குபிடிக்க முடியாது என்பதையும், சொந்தக் கட்சிக்காரர்களே கூட தனது பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பதையும் உணர்ந்தே ஸ்டாலின் இந்த ‘ராஜ தந்திர’ நடவடிக்கையை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
இப்படியாக ஸ்டாலின் தனக்கு மிக எளிதான தொகுதிகளாகப் பார்த்து பார்த்து தேர்வு செய்த அழகைப் பார்த்து கூட்டணிக் கட்சிகளும், திமுகவின் மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.