மக்களை ஏமாற்றும் ஸ்டாலினின் நாடகம் தோற்றுப்போகும் என்றும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிவகாசியில் வாக்கு சேகரித்தார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்போது உடனிருந்தார். மக்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்குசேகரித்தார். தமிழக மக்களின் அனைத்து தேவைகளையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதை சுட்டிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து விருதுநகரில் பிரசாரம் செய்த அவர்,பெண்களின் நலனுக்காக பார்த்து பார்த்து நல்ல திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு என்பதை சுட்டிக்காட்டினார். வறட்சியினால் பாதிக்கப்பட்ட 60 லட்சம் மக்களுக்கு 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றுவோம் என உறுதிபடக் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் தரக்குறைக்குறைவான வார்த்தைகளை பேசி தன்னை தாழ்த்திக்கொண்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்
சாத்தூரில் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மக்களவை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய அவர், யாருடைய ஆட்சியில் மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் கிடைத்தன என்பதை சீர்தூக்கி வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் இடம்பெறச்செய்தது அதிமுக அரசு தான் என சுட்டிக்காட்டினார்.