சிலைக்கடத்தல் வழக்குகளின் ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டு வந்த பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்குத் தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்.மாணிக்கவேல் வழக்கு தொடர்பான எந்த ஒரு ஆவணங்களையும் அரசிடம் கொடுக்காமல் இருப்பதால், சிலைக் கடத்தல் தொடர்பாக எந்த ஒரு தகவல்களையும் பரிமாறிக்கொள்ள முடியாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும், பொன் மாணிக்கவேல் அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பொன்.மாணிக்கவேலுக்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version