தனி ஒருவராக போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக வகுப்பெடுக்கும் விருதுநகரைச் சேர்ந்த வட்டாட்சியர்!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சேர்ந்தவர் தான் மாரிமுத்து. இவருக்கு தற்போது வயது 56 ஆகும். இவர் தற்போது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார். விருதுநகர் ஆட்சியர் கட்டிடத்திலு உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கக் கட்டிடத்தில் மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கும் இளையோர்களுக்கு தனியாளாய் வகுப்பெடுத்து வருகிறார். கிடத்தட்ட 17 ஆண்டுகளாக இந்த வகுப்பினை எடுத்து வருகிறார். இவரிடம் படித்து தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டது ஆகும்.

வட்டாட்சியர் மாரிமுத்து வறுமையில் வாழ்ந்து வந்தவர். அரசு வாகனத்தைப் பார்க்கும்போதெல்லாம் என்றாவது ஒருநாள் இந்த வாகனத்தில் நாமும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்துள்ளார். படிப்பு மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாக கொண்ட இவர் போட்டித் தேர்வுக்குப் படித்து அரசுப் பணியில் சேர்ந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அரசு அலுவலகங்களில் ரூபாய் 4000 மத ஊதியம் பெறும் தற்காலிக பணியாளர்களுக்கு 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்டத் தகுதித் தேர்விற்கு அவர்களை ஊக்கப்படுத்தி இலவச பயிற்சியினை முதன்முதலாக அவர்களுக்காக செய்தார். அவரிடம் படித்த 150 பேரில் 145 பேர் தேர்ச்சிப் பெற்று அரசுப் பணியில் நிரந்தமாகினர். இதனால் அவர், இப்போது வரை இலவச பயிற்சி அளித்து வந்து கொண்டிருக்கிறார். சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் இந்த பயிற்சி வகுப்பினை அவர் எடுக்கிறார். மேலும் சில அரசு விடுமுறை தினங்களிலும் மாணவர்கள் விரும்பினால் பயிற்சி எடுக்கிறார்.

அவர் வகுப்பெடுக்கும் விருதுநகர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு துறை அலுவலங்களிலும் அவரிடம் படித்து தேர்ச்சிப் பெற்ற முந்நூறுக்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் அவரிடம் படிப்பதற்கு இரண்டாயிரம் பேராவது வருகின்றனர். வரும் மாணவர்களில் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அதனால் சில நேரங்களில் மதிய உணவைத் தவிர்த்துவிட்டு பாடங்களைக் கவனிப்பது மாரிமுத்துவிற்கு மனதளவில் மிகவும் சங்கடமாக இருந்துள்ளது. எனவே மதிய நேரத்திலும் இனி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கவேண்டும் என்ற முடிவினை எடுத்து, அதற்கு ‘வள்ளலார் திட்டம்’ என்றப் பெயரினைச் சுட்டியுள்ளார். வயிறு நிறைய மனம் நிறையும். மனம் நிறைய அறிவு நிறையும்.

Exit mobile version