குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாட்டு இளைஞர்களைப் பொறுத்தவரை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பவர்களாக உள்ளார்கள். அதற்கு அவர்களின் பொருளாதாரச் சூழலும், குடும்ப பின்புலமும் காரணமாக இருக்கிறது. எப்படியாது அரசு வேலையை வாங்கிவிட்டால், குடும்பத்தின் வறுமையைப் போக்கி வாழ்வில் வளம் பெறலாம் என்ற லட்சியக் கனவுடன் இருக்கும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுபோலான செயல்களில் ஈடுபடுகிறது விடியா திமுக அரசு.

ஆம். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ உட்பட பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவானது எப்போது வெளிவரும் என்ற தெரியாமல் தேர்வர்கள் விழிபிதுங்கி இருக்கிறார்கள். இதனையொட்டி எதிர்க்கட்சித் தலைவரின் வலியுறுத்தல்களின் பேரில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது என்பதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, க்ரூப் 2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 இடங்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடந்து முடிந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவு வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குரூப்-1 பதவிகளில் வரும் 95 காலி பணியிடன்ங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான  நிலையில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி  முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

இதைத் தவிர, மேலும் 10 வன பயிற்சியாளர்  பணியிடங்கள், 178 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள், குரூப் 3-ல் வரும் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் துறையில் 33 பணியிடங்கள், புள்ளியியல் துறை 217 பணியிடங்கள், 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 9 உதவி வன பாதுகாவலர், வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள், 27 நூலகர் பணியிடங்கள், 121 வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள் போன்றவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு அடுத்த மாதத்தில், அதாவது ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது.

மேலும், 825 சாலை ஆய்வாளர் பணியிடங்கள், 1083 ஒருங்கிணைந்த என்ஜினியரிங் பணியிடங்கள் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், மீன்வளத்துறையில் 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கு வாய்மொழித் தேர்வு ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Exit mobile version