108 வைணத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலை பூலோக வைகுண்டம், பூலோக சொர்க்கம், பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பக்தர்கள் போற்றி வணங்கி வருகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுண்ட ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும். நடப்பாண்டின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது.
மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் ஏகாதசி விழாவில், பகல் பத்து, இரா பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இராப்பத்து நிகழ்வின் முதல் நாளான இன்று முக்கிய நிகழ்வாக சொர்க்க வாசல் என்கிற பரமபத வாசல் அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.
விருட்சிக லக்னத்தில் சரியாக 3.30 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தங்க பல்லக்கில் எழுந்தருளி, ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாலி கேட்டான் வாயில் வழியாக, கொடிமரம் கடந்து, குலசேகரன் திருச்சுற்றில் விரஜா நதி மண்டபத்தில் வேத விண்ணப்பம் கேட்டருளினார்.
தங்க பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளின் முன்பாக தமிழ் மறை, திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்களை மனமுருகப் பாடினர்.
இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, காலை 7 மணி முதல் பரமபதவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.