கணித மேதை ராமானுஜனின் நினைவு நாள்

பள்ளி கல்லூரி படிப்பின் போது, கணக்கு தேற்றங்கள் நம்மில் பலருக்கும் அலர்ஜியாக இருந்திருக்கும். ஆனால், நினைத்துக்கூட பார்க்க முடியாத சிக்கலானவை உள்ளிட்ட நாலாயிரம் தேற்றங்களை உலகிற்கு வழங்கிய கணித மேதை ராமானுஜனின் நினைவு நாள் இன்று……

 

நம்மில் பெரும்பாலானோருக்கு கணக்கு என்பது பள்ளியில் ஒரு பாடம், மாதாந்திர பட்ஜெட்டில் விழும் துண்டு, அவ்வளவு தான்.

ஆனால், தன் வாழ்நாள் முழுவதையும் கணிதத்திற்காகவே செலவிட்டவர் கணிதமேதை ராமானுஜன்.

கும்பகோணத்தில் 1887-ல் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராமானுஜன், பள்ளிப்படிப்பின் போதே கல்லூரி கணிதத்தை போட்டுக் காட்டி அசத்தினார்.

இந்த நிலையில், சென்னை துறைமுக கழகத்தில் குமாஸ்தா வேலைக்கு சேர்ந்தது, அவருக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

துறைமுக கழக பொறுப்பு தலைவர் ஸ்பிரிங் என்ற ஆங்கிலேயர், இவரது கணித குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அதனை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்திற்கு வரும்படி ராமானுஜனுக்கு அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்ற அவர், 1914-ம் ஆண்டில் இங்கிலாந்து சென்று, கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டவாறே, டிரினிட்டி கல்லூரியில் பயின்றார்.

அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழ்நாட்டை உலகளவில் தலைநிமிர செய்தார்.

இவரது வியக்கத்தக்க ஆராய்ச்சிகளை கவுரவிக்கும் விதமாக, இங்கிலாந்து பல்கலைக்கழகம் எப்.ஆர்.எஸ்., (FRS) பட்டத்தை வழங்கியது. இதனால், ராமானுஜத்தின் பெயர் தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் பரவியது.

ராமானுஜனின் கணிதம், அணுத் துகள் இயற்பியலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக, அவரது பகிர்வு சூத்திரம், ஹீலீயம் அணு போன்ற சில அணுக்களைத் துகள்களாகப் பிரிக்கும் தன்மையைப் பற்றி ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.

நைலான் போன்ற துணி வகைகளின் பண்புகளைத் தெரிந்துகொள்ளவும், தொலைபேசி கம்பி வடம் பொருத்துதல், குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

காச நோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ராமானுஜன், 32 வயதில், 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி உயிர் துறந்தார்.

ராமானுஜன்… இது வெறும் பெயர் அல்ல….. கணித விஞ்ஞானிகளின் தாரக மந்திரம்…

Exit mobile version