இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை கடந்த மாதம் 26 ம் தேதி நீக்கிய அந்நாட்டின் அதிபர் சிறிசேன, அவருக்கு பதிலாக ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தார்.
ஆனால் ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாடாளுமன்ற கலைப்புக்கு நவம்பர் 19 ம் தேதி வரை, இடைக்கால தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அதிபர் சிறிசேனவுக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.