அரசு நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல், நிதி மோசடி தொடர்பாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபரின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2018 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அரசு நிறுவனங்களில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்றியதால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன, விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையம் இதுவரை முக்கியப் பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியதை அடுத்துப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் கொழும்பில் உள்ள விசாரணை ஆணையத்துக்குச் சென்று ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். நண்பகலில் அலுவலகம் திரும்பிய அவர் பிற்பகலில் மீண்டும் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.