இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 6 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், பலி எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது.கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர்க்கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து.
இந்த குண்டுவெடிப்பில், 25 பேர் பலியானதாக வெளியான முதற்கட்ட தகவலைத் தொடர்ந்து, தற்போது பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. கொழும்புவில் 25 பேரும், மட்டக்களப்பில் 27 பேரும், நீர்க்கொழும்புவில் 50 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்டர் திருநாளில் நிகழ்ந்துள்ள இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது. இச்சம்பவத்தால், பண்டாரநாயகா விமான நிலையம் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ,இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பற்றி 10 நாட்களுக்கு முன்பே அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை சீர்குலைக்க நடந்திருக்கும் இந்த தொடர் குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக கடந்த 11ஆம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பிற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் யாரும் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும்படியும் இலங்கை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.