தமிழர் பூமியில் புதைக்கப்பட்ட தீவிரவாதி உடல் – இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் கண்டனம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதியன்று ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பொதுமக்கள் 500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகையே அதிரவைத்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் உடல்களை யாரும் வாங்க முன்வரவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் தாக்குதலில் ஈடுபட்ட  தீவிரவாதிகளில் ஒருவரான அசாத்தின் உடல் பாகங்களை போலீசார் மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைத்தனர். இந்த விவகாரம் இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மட்டகளப்பில் தீவிரவாதி முகமது அசாத்தின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை தமிழர்களின் மயான பூமியில் புதைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் வேதனை  அடைய செய்துள்ளது.  நேற்று நடந்த சம்பவத்தால்  அங்கிருக்கும் தமிழ் மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும்,  தமிழ் மக்களது மயான பூமியில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த  தீவிரவாதி ஒருவரை புதைப்பதை மட்டகளப்பு தமிழர்கள் மட்டுமின்றி இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களின் மயான பூமியானது அவர்களது உறவினர்களின் உடல் தகனம் மற்றும் ஈமக்கிரியைகள் போன்ற சடங்குகள் செய்வதற்கு பயன்பட்டு வந்தது. இத்தகைய வழிமுறைகளை மாற்றி இந்த  மயானத்தில் தற்போது தீவிரவாதி ஒருவரின் உடலை அடக்கம் செய்தது தமிழர்களின் பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விஷயத்தில் உடனடியாக தமிழ் அரசியல்வாதிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து புதைக்கப்பட்ட உடல் பாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தமிழர் பாரம்பரிய செயற்பாடுகள் அழிவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட அனைத்து இ.தொ.கா உறுப்பினர்கள்  ஒருபோதும் துணைபோக மாட்டோம் என்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version