புத்த கோயில்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது: இலங்கை உளவுத்துறை

இலங்கையில் உள்ள புத்த கோயில்களில் பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் அண்மையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். பயங்கரவாதி பதுங்கியிருக்கும் இடங்களில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலியாயினர்.

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து புத்த மத கோயில்களுக்கு செல்லும் பெண்கள் அணியும் 5 வெள்ளை நிற உடைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக நடைபெற்ற விசாரனையில் மார்ச் 29 ஆம் தேதி துணிக்கடை ஒன்றில் முஸ்லிம் பெண் ஒருவர் 9 வெள்ளை நிற ஆடைகளை வாங்கிச் சென்றதை, அந்த கடையில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் உறுதிபடுத்தியுள்ளனர். இதனை பயன்படுத்தி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. இதையடுத்து இலங்கை முழுவதும் உள்ள புத்த கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version