இலங்கை பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகளை மாற்றப்போவதாக அதிபர் சிறீசேன அறிவிப்பு

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு எதிரொலியாக பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகளை மாற்றப்போவதாக அந்நாட்டு அதிபர் சிறீசேனா அறிவித்துள்ளார்

கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 321ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக 40 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் இரங்கல் தெரிவித்ததுடன், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு மக்களிடம் மன்னிப்பு கோரியது.

இது தொடர்பாக இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் எச்சரிக்கையை கவனிக்க தவறியதற்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் சிறிசேனா, தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகளை மாற்றவுள்ளதாக தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பாக உளவுத்துறையின் எச்சரிக்கையை பாதுகாப்பு துறை அதிகாரிகள் தம்மிடம் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு முதல் இன்று காலை அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டிருந்தது

Exit mobile version