தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 225 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவசேனாபதியை விட 41 ஆயிரத்து 630 வாக்குகள் கூடுதலாக பெற்று எஸ்.பி.வேலுமணி வெற்றியை பதிவு செய்துள்ளார்.குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கமணி, ஒரு லட்சத்து 800 வாக்குகளை பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார். திமுக சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வெங்கடாசலத்தை விட, 31 ஆயிரத்து 646 வாக்குகள் கூடுதலாக பெற்று தங்கமணி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வெங்கடாசலம் 69 ஆயிரத்து 154 வாக்குகளை பெற்றார். குமாரபாளையம் தொகுதியில் தங்கமணியை தவிர வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.கே.முருகனை விட 28 ஆயிரத்து 100 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 961 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகனை விட அவர் 3 ஆயிரத்து 128 வாக்குகளை கூடுதலாக பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட 12 ஆயிரத்து 403 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். கடம்பூர் ராஜூ 68 ஆயிரத்து 556 வாக்குகளையும், டிடிவி தினகரன் 56 ஆயிரத்து 153 வாக்குகளையும் பெற்றனர்.