"பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்" – எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சியில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு கொண்டுவரப்பட்ட இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி இருக்கிறார்.

சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி இதனை வலியுறுத்தி இருக்கிறார்.

நடப்பு நிதிநிலை அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறைக்கு குறைவான அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதனை அதிகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 30 பேர் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனமும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர்,

கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பேரவையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 658 அம்மா உணவகங்களுக்காக 2020-21ஆம் நிதியாண்டில் அதிமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை கூட்டிக்காட்டிய அவர், திமுக அரசு இதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் தமிழகத்திற்கு வர வேண்டிய 2 ஆயிரத்து 577 கோடி ரூபாய் வராமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி பேசிய அவர், அந்த தொகையில் 85 சதவீதம் பெறப்பட்டு விட்டதாகவும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் நிலுவையில் உள்ள தொகை கிடைக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.

Exit mobile version