அதிமுகவை பொய் வழக்குகளால் அச்சுறுத்த முடியாது – எஸ்.பி.வேலுமணி

இருபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை பொய் வழக்குகளால் அச்சுறுத்த முடியாது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சட்ட அலுவலகத்தை அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சி காலங்களில், அதிமுக கட்சி தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அப்போது, அதிமுக வழக்கறிஞர் அணியினர் தான் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பொய் வழக்கு போடுவது வாடிக்கை தான் என கடுமையாக சாடிய அவர், அதிமுகவை அழிக்க கருணாநிதியே போராடி பார்த்து எதுவும் செய்ய முடியாமல் ஒதுங்கினார் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் விரும்பி வாக்களித்து திமுக ஆட்சிக்கு வரவில்லை என்று கூறினார். பொய்யான வாக்குறுதிகளைக் அள்ளி வீசி திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாகக் கூறிய அவர், இது நிரந்தரம் கிடையாது என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை திமுக அரசு முடக்க நினைத்தால், வெகுண்டெழுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

Exit mobile version