தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸும் ஆண்ட போது, துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், கோவை மாவட்டத்துக்கு என்ன செய்தார் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தொழில்துறைக்கும், தொழிற்சாலைகளுக்கும், மத்திய அரசிடமிருந்து வரும் திட்டங்களுக்கெல்லாம் உதவிகரமாக இருந்து செயல்படுபவர் வானதி சீனிவாசன் என்று கூறினார்.
தான் உள்ளாட்சித்துறை அமைச்சராக, தமிழகத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளையும், ஏராளமான வளர்ச்சிப்பணிகளையும் செய்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன்னுடைய பணிகளை பாராட்டி, 143 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 2006-ல் தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆண்ட போது, துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், கோவை மாவட்டத்துக்கு என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.