சென்னை மாநகராட்சி சார்பில் கூடுதலாக 50 வாகனங்களில் புகை பரப்பும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது பேசிய அவர், சளி, இருமல் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் கொசு புழுக்களின் உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும், சுகாதாரமற்ற இடங்களாக கண்டறியப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு சுமார் 22 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நோய் மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.