பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தடகள பயிற்சியாளர் நாகராஜனை, 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற தடகள பயிற்சி மையத்தை, தடகள பயிற்சியாளர் நாகராஜன் நடத்தி வந்தார்.
தன்னிடம் பயிற்சி பெற்ற 20-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு, அவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்டபாக, தடகள வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் மீது மேலும் பல வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, விருகம்பாக்கத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் இல்லத்தில், அவரது முன்னிலையில் நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, ஜூன் 11ஆம் தேதி வரை, 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.