ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ (Spider Man : No Way Home) படம், வசூலிலும் அதேமாதிரியான பிரம்மாண்டத்தை நிகழ்த்தும் படைப்பாக மிரட்டுகிறது.
ஜோன் வாட்ஸ் (Jon Watts) இயக்கியிருக்குற இந்தப் படத்துல டோம் ஹோலண்ட் (Tom Holland) ஸ்பைடர் மேன் ஆகவும். ஸெண்டயா (Zendaya), அல்ஃப்ரட் மொலினா (Alfred Molina), ஜமி பாஃக்ஸ் (Jamie Foxx), பெண்டிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch) ஆகியோர் முக்கியமான பாத்திரங்கள்-லயும் நடிச்சிருக்காங்க.
முந்தின பாகமான Spider Man : Far from Home படத்தோட தொடர்ச்சியா, ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ தொடங்குது. ஏற்கனவே ஸ்பைடர் மேன்க்கு பல சிக்கல்கள் இருக்குறதால, இந்தப் படத்துலயும் அவனும் அவனோட நண்பர்களும் பாதிக்கப்படுறாங்க. MIT என்ற பல்கலைக்கழகத்துல சேர முடியாத சூழலும் அவங்களுக்கு உருவாகுது.
இந்த பிரச்சினைகள தீர்க்குறதுக்கு ஒரேவழி ஒட்டுமொத்த உலகமும் ஸ்பைடர் மேன மறக்கணும். அதனால, இதுக்கு உதவி செய்யச் சொல்லி, டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் பீட்டர் பார்க்கர் வேண்டுகோள் வைக்குறார்.
அந்தத் தருணத்தில் சிக்கல்கள் இன்னும் பெரிதாக, மேலும் சில பிரபஞ்சங்கள்ல இருந்து க்ரீன் காப்லின், மணல் மனிதன், பல்லி உருவம் கொண்ட மனிதன், மின்சார மனிதன் இவங்க எல்லாரும் பூமிக்கு வர்றாங்க. அவங்க எல்லாரையும் ஸ்பைடர் மேன் எப்படி எதிர்கொள்றான்ங்குறது தான் படத்தோட மொத்த கதையும்.
படம் தொடங்கினதுமே மிகவும் அட்டகாசமான காட்சிகள் ரசிகர்கள்ல மிரள வைக்கிறது என்னவோ உண்மை தான். ஆனால், அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் திரைக்கதையை மெதுவாக நகர்த்துவதாக தோன்றுகிறது.
இதையெல்லாம் அமர்க்களமான ஆக்சன் காட்சிகளில் சரிசெய்து விடுகிறார் இயக்குநர் ஜோன் வாட்ஸ். இரண்டாம் பாதியில் எதிர்ப்பார்க்காத இன்னும் ஒரு அட்டகாசமான அதிரடியை அரங்கேற்றி, ஸ்பைடர் மேன் ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளார் இயக்குநர். இந்த அதிரடி படத்திற்கு இன்னும் வலுசேர்ப்பது தான் சிறப்பம்சம்.
நேர்த்தியான கிராஃபிக்ஸுடன் கூடிய சண்டைக் காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்கின்றன. Michael Giacchino-ன் பின்னணி இசையும், Mauro Flore-ன் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.
கதை, திரைக்கதைகளில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் பார்த்தால் ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ படத்தின் மேக்கிங்கை பார்த்து பிரமிக்கலாம். குறிப்பாக 3டி தொழில்நுட்பத்திலும் இந்தப் படம் வெளியாகி இருப்பது குழந்தைகளுக்கு கொண்டாட்டமான மனநிலையைத் தரும் என உறுதியாகக் கூறலாம்.
– அப்துல் ரஹ்மான்