இந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்யும் நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்
இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான பரேபேரைச் சேர்ந்தவர் ரூடி ஹர்டானோ, கஃபே ஒன்றில் பணியாற்றி வருகிறார். இயற்கை ஆர்வலரான இவர் ஸ்பைடர்மேன் போல் உடையணிந்து அப்பகுதியில் உள்ள மட்காத குப்பைகளை சுத்தம் செய்து வருகிறார்.
உலகில் அதிக அளவில் குப்பைகளை உருவாக்குவதில் இந்தோனேசியா 4 வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. கவனக்குறைவாலும், அலட்சியத்தினாலும் வீதிகளிலும், கடற்கரைகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுவதாக குறிப்பிடும் அவர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நானே வீதிகளில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்வதாக தெரிவித்தார். இதனால் தானே ஸ்பைடர் மேன் உடையணிந்து குப்பைகளை சுத்தம் செய்ய துவங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரூடி ஹர்டானோவின் வித்தியாசமான முயற்சி அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவரின் முயற்சிக்கு வரவேற்பும் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.